காவலர் பணி எழுத்து தேர்வு 1.96 லட்சம் பேர் பங்கேற்பு
காவலர் பணி எழுத்து தேர்வு 1.96 லட்சம் பேர் பங்கேற்பு
ADDED : நவ 10, 2025 12:58 AM

சென்னை: காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறையில் பணிபுரிய, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வுகளில், ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 161 பேர் பங்கேற்றனர்.
காவல் துறையில் 2,833; சிறைத்துறையில் 180 இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு துறையில், 631 தீயணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும், இப்பணிகளுக்கு சிறப்பு பணி ஒதுக்கீட்டில், பழங்குடியினர், 21 பேர் என, 3,665 பேர் தேர்வு செய்ய இருப்பதாக, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இப்பணிகளுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, 2 லட்சத்து, 24 ஆயிரத்து, 711 பேர் விண்ணப்பித்தனர். மாநிலம் முழுதும், 45 மையங்களில் நேற்று எழுத்து தேர்வு நடந்தது.
மொத்தம், ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 161 பேர் பங்கேற்றனர். விண்ணப்பித்தவர்களில், 87.3 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதாதவர்கள், 28,500 பேர்.
சென்னையில், 10 மையங்களில், 8,090 பேர் தேர்வு எழுதினர். இவர்கள் முதன்மை எழுத்து தேர்வில், குறைந்த பட்சம், 25 மதிப்பெண்கள், தமிழ் மொழி தகுதித் தேர்வில், 32 மதிப்பெண்கள் பெற வேண்டும். அப்போது தான் உடல் தகுதி உள்ளிட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர்.
தேர்வு மையத்தில் முதன் முறையாக, விண்ணப்பதாரர்களின் வருகைப் பதிவு மற்றும் ஆள்மாறாட்டத்தை கண்காணிக்க, அவர்களின் இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என, சீருடை பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

