ADDED : டிச 28, 2024 01:12 AM
சென்னை: தமிழகத்தில் சார் - பதிவாளர் பணிகளை கண்காணிக்க, 54 மாவட்ட பதிவாளர்கள் உள்ளனர். இவர்களில் நிர்வாக பணியில் உதவி ஐ.ஜி., நிலையில், மாவட்ட பதிவாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அந்தந்த பதிவு மாவட்டத்தில் பத்திரப்பதிவு தொடர்பான விவகாரங்களை, இவர்கள் கண்காணிப்பதுடன், முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டும். இந்நிலையில், பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், உதவியாளர்களே பொறுப்பு சார் - பதிவாளர்களாக செயல்படுகின்றனர்.
அந்த இடங்களில், பொறுப்பு சார் -- பதிவாளர்கள் அனைவரும், நிர்வாக பணி மாவட்ட பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்த வகையில், திருச்சி, திண்டுக்கல் பதிவு மாவட்டங்களில், பொறுப்பு சார் - பதிவாளர்களின் குளறுபடிகள் தொடர்பாக புகார்கள் வந்தன.
மாவட்ட பதிவாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், இப்புகார்கள் பதிவுத்துறை மேலதிகாரிகளுக்கு சென்றன. அதன் அடிப்படையில், திருச்சி பதிவு மாவட்ட உதவி ஐ.ஜி., - எம்.ராஜா வேலுாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் பதிவு மாவட்ட உதவி ஐ.ஜி., சின்ராஜ், தஞ்சை பதிவு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.