ADDED : டிச 13, 2025 12:43 AM

சென்னை: நீர்வளத்துறையில் புதிதாக இரண்டு மண்டலங்களை உருவாக்கி, தலைமைப் பொறியாளர்களை நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
நீர்வளத்துறை வாயிலாக, மாநிலம் முழுதும் 90 அணைகள், 15,000க்கும் அதிகமான ஏரிகள் உள்ளிட்ட நீராதாரங்கள் பராமரிக்கப்படுகின்றன. ஆற்று நிலங்களின் அடிப்படையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை என, நான்கு மண்டலங்கள் உள்ளன. இவற்றுக்கு தலைமை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை மண்டல நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளன .
மதுரை மண்டல நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்ளன.
இதில், அதிக மாவட்டங்கள் உள்ளதால், மண்டல தலைமைப் பொறியாளர்கள், மாவட்ட வாரியாக ஆய்வுக்கு செல்வதிலும், நீராதாரங்கள் குறித்த திட்டங்களை வகுப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சென்னை, மதுரை மண்டலங்களை பிரிக்க, நீர்வளத்துறை முடிவெடுத்துள்ளது.
அதன்படி, சென்னை மண்டலத்தை பிரித்து வேலுார் மண்டலம்; மதுரை மண்டலத்தை பிரித்து, திருநெல்வேலி மண்டலம் உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது.

