சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது-1401 மதுபாட்டில்கள் பறிமுதல்.
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது-1401 மதுபாட்டில்கள் பறிமுதல்.
ADDED : மார் 25, 2024 07:02 PM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் 1401 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சீர்காழி தாலுக்கா கொடக்காரமூலை கிராமத்தில் ஒரு வீட்டில், விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீஸார் அந்த வீட்டுக்குச் சென்று சோதனையிட்ட போது, 180 மில்லி அளவு கொண்ட 1,350 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை பதுக்கி வைத்திருந்த அன்புச்செல்வி.36. என்பவரை கைது செய்தனர்.
இதுபோல கீழையூர் சுடுகாட்டுப் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற தேர்தல் வழக்கு படையினர் 21 புதுச்சேரி மது பாட்டில்கள், 30 தமிழக மது பாட்டில்கள் என மொத்தம் 51 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மது விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரை கைது செய்து செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

