UPDATED : அக் 31, 2026 09:38 PM
ADDED : அக் 31, 2026 09:36 PM
வாணியம்பாடி: ஆட்டோவில் ஊர் ஊராக சென்று கருக்கலைப்பில் ஈடுபடும் பெண்கள், இருவரை, வாணியம்பாடி தாலுகா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இந்திராணி, 60, கீதா, 60. இவர்கள் மருத்துவம் படிக்காமல், ஊர் ஊராக சென்று கருக்கலைப்பு செய்து வருவதாக, திருப்பத்துார் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து கண்காணிக்க அறிவுறுத்தியது. அதன்படி நேற்று திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் புதுார் பகுதியில், கரு கலைப்பு செய்திட ஆட்டோவில் இருவரும் செல்வதாக, மாவட்ட சுகாதார அலுவலர் கழு சிவலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அவர், டாக்டர் அரவிந்தன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோவில் இருந்த இந்திராணி மற்றும் கீதா ஆகிய இருவரையும் பிடித்து, வாணியம்பாடி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
