மிகவும் அபாயகரமான பேரிடர் பகுதி நீலகிரியில் 20 இடங்கள் கண்காணிப்பு
மிகவும் அபாயகரமான பேரிடர் பகுதி நீலகிரியில் 20 இடங்கள் கண்காணிப்பு
ADDED : செப் 28, 2025 04:00 AM

ஊட்டி:நீலகிரியில் வட கிழக்கு பருவமழை எதிரொலியாக மிக பேரிடர் அபாய பகுதிகளாக கண்டறியப்பட்ட, 20 இடங்களை கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தேசிய அளவில் பேரிடர் பாதிப்புகள் அதிகளவில் உள்ள பகுதிகள் குறித்து, தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் அபாயம் உள்ள ஒரே மாவட்டமாக, நீலகிரி மலை பகுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 'மிகவும் அபாய பகுதி, 68; அபாய பகுதி, 89; நடுத்தர அபாய பகுதி, 77; அபாயம் குறைந்த பகுதி, 48' என, மாவட்டத்தில், 283 நிலச்சரிவு அபாய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதிலும் மிக மிக ஆபத்தான பகுதிகளாக ஊட்டி தாலுகாவில் எல்க்ஹில், வேலிவியூ அண்ணா நகர், மேல் கோடப்பமந்து, காந்திநகர், பாக்யா நகர். குந்தா தாலுக்காவில் கெத்தை, சேரன் நகர், தேவர் பெட்டா.
குன்னுார் தாலுக்காவில் மேட்டுப்பாளையம் ரோடு, நஞ்சப்பா சத்திரம், கேத்தி ரயில்வே ஸ்டேஷன் பகுதி, மேல் மந்தாடா. கோத்தகிரி தாலுகாவில் தவிட்டு மேடு, கம்பி சோலை, ஒன்னரை ரோடு.
கூடலுார், பந்தலுார் தாலுகாக்களில் மூலக்கடை பகுதி, பெரிய சூண்டி, நடுவட்டம் ஆகாச பாலம், தவளை மலை, மேல் கூடலுார், உள்ளிட்ட, 20 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'இப்பகுதிகளில் நடக்கும் விதி மீறலை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம், 42 மண்டல குழுக்களை நியமித்துள்ளது' என்றனர்.