ADDED : ஏப் 27, 2025 01:25 AM

சென்னை: மத்திய அரசு, ராணுவ வீரர்களுக்கான உணவில் சிறுதானிய வகைகளை சேர்த்துள்ளது. இதற்காக, தமிழக விவசாயிகளிடம் இருந்து நடப்பு சீசனில், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு இந்திய உணவு கழகம் அனுமதி அளித்தது.
கடந்த ஆண்டு நவம்பரில், கேழ்வரகு கொள்முதல் சீசன் துவங்கியது. இந்தாண்டு பிப்ரவரியில் முடிவடைந்த சீசன், வரும் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுவரை, 846 விவசாயிகளிடம் இருந்து, 2,015 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 6.63 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிலோவுக்கு, 42.90 ரூபாய் ஆதரவு விலை வழங்கப்படுகிறது.
தற்போது கூடுதலாக, காஞ்சிபுரம், நாகை மாவட்டங்களிலும் கேழ்வரகு கொள்முதல் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.

