விடுபட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட 21 நாட்கள் அவகாசம்
விடுபட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட 21 நாட்கள் அவகாசம்
ADDED : ஜன 27, 2025 11:51 PM

விருதுநகர் : தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துப்படுகிறது. இந்நோய் பாதித்த கால்நடைகளின் கால், வாய் பகுதிகளில் புண், காய்ச்சல், தீவனம் உண்ணாமை, சினை சிதைவு, இளங்கன்று இறப்பு போன்ற பாதிப்பு ஏற்படும்.
காற்றின் மூலம் இந்நோய் பரவும் என்பதால் பண்ணையில் ஒரு மாட்டிற்கு வந்தாலும் அனைத்தையும் பாதிக்கும். கலப்பின மாடுகளை அதிகமாக தாக்கி உரிமையாளருக்கு பொருளாதாரம், உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும்.
இந்த நோய் குளிர், பனிக்காலங்களில் பரவும் தன்மை கொண்டது. மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.
இந்நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்தாண்டு டிசம்பரில் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டது. ஜனவரி முதல் வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது.
தற்போது விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த 21 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணியில் கால்நடை பராமரிப்புத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் அனைத்தும் இம்மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

