ADDED : ஜன 21, 2025 06:23 AM

மூணாறு,:   மூணாறைச் சுற்றியுள்ள தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றில் பறவை, வண்ணத்துப்பூச்சி, தும்பி ஆகியவற்றின் கணக்கெடுப்பின் போது புதிதாக 24 வகை கண்டறியப்பட்டன.
மூணாறைச் சுற்றியுள்ள இரவிகுளம், பாம்பாடும்சோலை, மதிகெட்டான் சோலை, ஆனமுடி ஆகிய தேசிய பூங்காக்கள், சின்னார், குறிஞ்சிமலை ஆகிய வன உயிரின சரணாலயம் ஆகியவற்றில் கடும் குளிர் நிலவிய ஜனவரி முதல் வாரத்தில் பறவை, வண்ணத்துப் பூச்சி, தும்பி ஆகியவற்றின் கணக்கெடுப்பு நடந்தது.
திருவிதாங்கூர் இயற்கை வரலாற்று சங்கம் தலைமையில் நடந்த கணக்கெடுப்பில், அச்சங்கத்தின் இணை ஆராய்ச்சியாளர் காலேஷ் சதாசிவன்,  மூணாறு வனவிலங்கு காப்பாளர் ஹரிகிருஷ்ணன், உதவி காப்பாளர் நிதின்லால் மற்றும் சமூக அமைப்புகள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
கணக்கெடுப்பின்போது புதிதாக 11 வகை பறவை உள்பட 217 வகை பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. எட்டு புதிய வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்பட 166 வகை கண்டறியப்பட்டதால், அதன் எண்ணிக்கை 246 வகையாக அதிகரித்தது. சின்னார் வன உயிரின சரணாலயத்தில் மட்டும் 148 வகை வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. ஐந்து புதிய வகை தும்பிகள் உள்பட 33 வகை தும்பிகள் கண்டு பிடிக்கப்பட்டதால், அதன் 58 வகையாக அதிகரித்தது.
புதிதாக கண்டறியப்பட்டவை
பறவை: பிரவுன் ஹாக் ஆந்தை, பட்டன் காடை, புள்ளி ஆந்தை, மச்சமர ஆந்தை, பாயாவீவர், ரெட் அவடவட், ரிச்சார்ட்ஸ் பிபீட், கோல்டன் ஹெட்டேக் சிஸ்டிகோலா, லார்ஜ் கிரே பாப்லர், செஸ்நெட் பெல்லிடு, ஜெர்டன்ஸ் புஷ் லார்க் .
வண்ணத்துப் பூச்சி: ரெட் டிஸ்க் புஷ் பிரவுன், பழனி புஷ் பிரவுன், பழனி ப்ரில்லரி, பழனி போர்ரிங், நீலகிரி போர்ரிங், நீலகிரி குளவ்டேட் எல்லோ, நீலகிரி டைகர்.
தும்பி: க்ராட்டிலா லினியாட்டா கால்வர்ட்டி, மேக்ரோ டிப்ளாக்ஸ் கோரா, பால் பாப்லூராசெக்ஸாமகுயூலேட்டா, தோலிமிஸ்டில்லர்கா, லெஸ்டெஸ் எலாடஸ்ஹேகன்.

