தேர்தலில் நிற்காத 24 தமிழக கட்சிகள்; பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு
தேர்தலில் நிற்காத 24 தமிழக கட்சிகள்; பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு
ADDED : ஜூன் 28, 2025 04:23 AM

சென்னை : தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை, இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.
புதிதாக துவக்கப்படும் கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்படுகின்றன. இந்த கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட்டு, குறிப்பிட்ட ஓட்டு சதவீதத்தை பெற்றால், அவற்றை அங்கீகரிக்கப்பட்டவையாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
இந்த விதியை பூர்த்தி செய்ய முடியாத கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக மட்டுமே தேர்தல் ஆணையத்தால் கருதப்படும். தற்போது நாடு முழுதும், 2,800க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி விலக்கு, அங்கீகாரம், பொது சின்னம், சின்னம் ஒதுக்குவதில் முன்னுரிமை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இவற்றை பெற, பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகளை பல கட்சிகள் பூர்த்தி செய்யாமல் இருக்கும் தகவல், தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
அந்த கட்சிகளை அடையாளம் காணும் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. அதன்படி, தற்போது வரை நாடு முழுதும் 345 கட்சிகள் கண்டறியப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 24 கட்சிகள் கண்டறியப்பட்டு உள்ளன.
இந்த கட்சிகள், 2019 முதல் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. அத்துடன், இக்கட்சிகளுக்கு அலுவலகங்களும் இல்லை. இந்த கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள 24 கட்சிகளிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.