'309 வேலைவாய்ப்பு முகாம்களில் 2.49 லட்சம் பேருக்கு வேலை'
'309 வேலைவாய்ப்பு முகாம்களில் 2.49 லட்சம் பேருக்கு வேலை'
UPDATED : ஏப் 25, 2025 02:36 AM
ADDED : ஏப் 25, 2025 01:16 AM

''நான்கு ஆண்டுகளில் நடந்த, 309 அரசு வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக, 2.49
லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்,'' என, தொழிலாளர் நலத்துறை
அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க.,-
காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், மகளிர்
தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து தர வேண்டும். தொழிற்பயிற்சி நிலையங்களில்
மாணவியருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா? ராமநாதபுரம் மாவட்டத்தில்,
எவ்வளவு இட ஒதுக்கீடு மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. தனியார் வேலை
வாய்ப்பு முகாம்கள் அதிகளவில் நடத்தப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில்,
அரசு வேலை வாய்ப்பு முகாம் நடத்த வேண்டும்.
அமைச்சர் கணேசன்:
தமிழகத்தில் உள்ள, அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், மாணவியருக்கு, 30
சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து
தொழிற்பயிற்சி நிலையங்களில், 369 மாணவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு
உள்ளது.
நடப்பாண்டு ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை என்ற ஊரில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது.
அங்கு,
116 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதில், 35 மாணவியருக்கு
இட ஒதுக்கீடு வழங்கப்படும். அரசு பொறுப்பேற்ற பிறகு, 2021 முதல் இதுவரை,
309 பெரிய அளவிலான அரசு வேலைவாய்ப்பு முகாம்கள், தமிழகம் முழுவதும்
நடத்தப்பட்டு உள்ளன.
இதன் வாயிலாக, 2.49 லட்சம் பேருக்கு பணி நியமன
ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏழு வேலைவாய்ப்பு
முகாம்கள் நடத்தப்பட்டு, 3,259 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு
உள்ளன.
இவ்வாறு விவாதம் நடந்தது.