ஏர்போர்ட்டில் ஒரே நாளில் 20 கிலோ தங்கம் பறிமுதல்; விமானங்களில் கடத்தி வந்த 25 'குருவி'கள்
ஏர்போர்ட்டில் ஒரே நாளில் 20 கிலோ தங்கம் பறிமுதல்; விமானங்களில் கடத்தி வந்த 25 'குருவி'கள்
ADDED : நவ 12, 2024 12:52 AM
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 15 கோடி ரூபாய் மதிப்பிலான, 20 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலில் ஈடுபட்ட 25 பேரை, சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலானய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம், சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக, சென்னை மத்திய வருவாய் புலானய்வு அதிகாரிகளுக்கு, நேற்று முன்தினம் மாலை ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படையினர் விமான நிலையத்தில் முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.
சிங்கப்பூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, ஸ்கூட் விமானம்; 11:45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்; நள்ளிரவு 12:15 மணிக்கு இண்டிகோ உள்ளிட்ட விமானங்கள் சென்னைக்கு வந்தன.
சுற்றுலா விசா
இந்த விமானங்களில் சந்தேகிக்கும்படி இருந்த, 17 ஆண், எட்டு பெண் என, 25 பேரை தடுத்து நிறுத்தி, அவர்களது உடைமைகளை, அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஒரு ஆணும், பெண்ணும் உள்ளாடைக்குள், 1.5 கிலோ மதிப்பிலான தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, மற்றவர்களின் உடைமைளை பிரித்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான, 19.77 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த டி.ஆர்.ஐ., மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தி வந்த பயணியரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையில், தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களை சேர்ந்த 25 பேரும், சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்கு சென்று திரும்பியது தெரிய வந்தது.
கடத்தல் சிண்டிகேட்
தங்கம் மீதான சுங்கவரியை மத்திய அரசு குறைத்தபின், சென்னை விமான நிலையத்தில் அதிக அளவில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறை.
ஒரே நேரத்தில், 25 பேர் பிடிப்பட்டு இருப்பதால், இதன் பின்னணியில், கடத்தல் மாபியா நெட்வொர்க் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஒரே விமானத்தில் வந்தால் பிடிபட வாய்ப்பு அதிகம் என்பதால், தனித்தனியாக விமானம் புக்கிங் செய்து, கூட்டாக கடத்தலில் ஈடுபட்டதாக, விசாரணையின்போது, கடத்தல் குருவிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையம் வெளியே காத்திருந்து, கடத்தல் தங்கத்தை வாங்க இருந்த நபர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமிரா வாயிலாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக கடத்தல் குருவிகள், ஒரே விமான நிலையத்தை மையமாக வைத்து, கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவது கிடையாது.
உதாரணமாக, சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு, சென்னை போன்ற வெவ்வேறு விமான நிலையங்களுக்கு சென்று, 'டிரான்சிட்' பயணியராக மாறி கடத்தலில் ஈடுபடுவர்.
ஆனால், அடுத்தடுத்த விமானங்களில், 'ஜாயின்ட் நெட்வொர்க்' போல செயல்பட்டு, சென்னையில் சிக்கி உள்ளனர்.
இவர்கள், மற்ற கடத்தல் கும்பலின் சிண்டிகேட்டுடன் தொடர்பில் இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, அடிக்கடி குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பியவர் குறித்த விபரங்களை கண்டறிந்து கண்காணிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எச்சரித்த சி.பி.ஐ.சி.,
நாட்டில் சென்னை உட்பட முக்கிய சர்வதேச விமானங்களில், புதுப்புது வழிகளில் கடத்தல்காரர்கள் வருவர் என, மத்திய அரசின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், சில மாதங்களுக்கு முன் எச்சரித்தது.
அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் அதிகளவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.