அக் ஷய திருதிக்கு 25,000 கிலோ தங்கம் விற்பனை; விலை உயர்வால் எதிர்பார்த்த 20% அதிகரிக்கவில்லை
அக் ஷய திருதிக்கு 25,000 கிலோ தங்கம் விற்பனை; விலை உயர்வால் எதிர்பார்த்த 20% அதிகரிக்கவில்லை
ADDED : மே 01, 2025 04:37 AM

சென்னை: தமிழகத்தில் அக் ஷய திருதியை முன்னிட்டு, நேற்று தங்கம் விற்பனை, 20 சதவீதம் அதிகரிக்கும் என்று நகைக்கடை வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டின் விற்பனை அளவான, 25,000 கிலோ என்றளவில் தான், தங்கம் விற்பனையாகி உள்ளது.
அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை, மக்களிடம் உள்ளது. இதனால், வசதியானவர்கள் மட்டுமின்றி, ஏழை மக்களும் தங்கம் வாங்குகின்றனர். அக் ஷய திருதியை அன்று, தங்கம் விற்பனை அமோகமாக இருக்கும். கடந்த ஆண்டு அக் ஷய திருதியைக்கு, 25,000 கிலோ தங்கம் விற்பனையானது.
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். அதனால், எப்போதும் இல்லாத வகையில், கடந்த நான்கு மாதங்களில், தங்கம் விலை சவரனுக்கு, 15,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இம்மாத துவக்கத்தில் தங்கம் விலை திடீரென குறைவது, மீண்டும் உயர்வது என, ஏற்ற, இறக்கமாக இருந்தது. இதனால், இரு வாரங்களுக்கு முன்னதாகவே, அக் ஷய திருதியைக்கு நகைகளை முன்பதிவு செய்ய, நகைக்கடைகள் புதிய சலுகைகளை அறிமுகம் செய்தன.
அதன்படி, 10 சதவீத தொகையை செலுத்தி, நகைகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க வரும் போது, முன்பதிவு செய்த நாளில் இருந்து, அக் ஷய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு நகைகளை வாங்கலாம். குறிப்பிட்ட தொகைக்கு மேல் தங்கம் வாங்கினால், தங்க நாணயம் இலவசம், சேதாரத்தில் தள்ளுபடி, வைரம் வாங்கினால் தங்க நாணயம் இலவசம் என, பல சலுகைகளை அறிவித்தன.
அக் ஷய திருதியை தினமான நேற்று, சென்னை உட்பட மாநிலம் முழுதும் நகைக்கடைகள் காலை, 6:00 மணிக்கு திறக்கப்பட்டன. மக்கள் நகைக் கடைகளுக்கு சென்று, நகைகளை வாங்கினர். எனினும், பல கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டில் விற்பனையான அளவிற்கே, நேற்றும் தங்கம் விற்பனை இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, தங்க நகைக் கடை உரிமையாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில், சிறியது, பெரியது என, மொத்தம், 35,000 நகைக்கடைகள் உள்ளன. அவற்றில் தினமும் சராசரியாக, 10,000 முதல் 15,000 கிலோ தங்கம் விற்பனையாகிறது. அக் ஷய திருதியை, தீபாவளி போன்ற சுப தினங்களில், தங்கம் விற்பனை நன்றாக இருக்கும். கடந்த, 2023 அக் ஷய திருதியைக்கு, 20,000 கிலோ, 2024ல், 25,000 கிலோ தங்கம் விற்பனையானது. அதை விட, 20 சதவீதம் இந்த அக் ஷய திருதியைக்கு அதிகரிக்கும் என்று, எதிர்பார்க்கப்பட்டது.
தங்கம் விலை உயர்வு, விலை குறையும் போது வாங்கலாம் என்ற குழப்பத்தால், பல வாடிக்கையாளர்கள், அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்காததால், எதிர்பார்த்த அளவுக்கு, விற்பனை அதிகரிக்கவில்லை. கடந்த ஆண்டில் விற்பனையான, 25,000 கிலோ தான் இந்தாண்டும் இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.