UPDATED : நவ 16, 2026 10:27 PM
ADDED : நவ 16, 2026 10:24 PM
கண்ணமங்கலம்: மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில், வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மக்கான் பகுதியை சேர்ந்தவர் இப்ராஹீம், 30. கடந்த, 13ம் தேதி அப்பகுதியை சேர்ந்த நண்பர்களான மஸ்தான், 30, ரவிக்குமார், 32, அப்ரார்கான், 27. ஆகியோருடன் சேர்ந்து, மக்கான் பகுதியில் மது அருந்தினார்.
இப்ராஹீம் மது போதையில், நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டதால், அவரது தாயை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அழைத்து செல்லுமாறு நண்பர்கள் கூறினர். அப்போது இப்ராஹீம், நண்பர்களை தாக்கினார். ஆத்திரமடைந்த நண்பர்கள், 3 பேரும் இப்ராஹீமை சரமாரி தாக்கினர். இப்ராஹீமின் தம்பி ரஷீர், இப்ராஹீமை மீட்டு, திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளத்தில் உள்ள தன் சகோதரி நசியா வீட்டில் தங்க வைத்தார்.
மறுநாள், 14ம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டு இப்ராஹீம் பலியானார். இது குறித்து, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மஸ்தான், ரவிக்குமார், அப்ரார்கான், ஆகிய, 3 பேரை, நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
