விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி பட்டதாரி பெண் உட்பட 3 பேர் பலி
விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி பட்டதாரி பெண் உட்பட 3 பேர் பலி
ADDED : மே 22, 2025 03:55 AM

திருவெண்ணெய்நல்லுார்: விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி பட்டதாரி பெண் மற்றும் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகள்கள் சிவசங்கரி, 20; பட்டதாரி. அபிநயா, 15; ( பத்தாம் வகுப்பு மாணவி). நேற்று காலை, சிவசங்கரி, அவரது தங்கை அபிநயா மற்றும் விருந்தினராக வந்திருந்த பண்ருட்டி தட்டாம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் ராஜேஷ், 13; கிரண், 8; ஆகிய நான்கு பேரும் அரசூர் மலட்டாறில் குளிக்க சென்றனர்.
காலை 11:00 மணியளவில் சிவசங்கரி, அபிநயா, ராஜேஷ் ஆகிய மூவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். சிறுவன் கிரண் கரையில் அமர்ந்திருந்தார். ஆற்றில் இறங்கிய மூவரும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி மாயமாகினர்.
இதை பார்த்த கிரண் கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தேடியும் காணவில்லை. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மூழ்கி மாயமான மூவரை தேடினர். அப்போது, இறந்த நிலையில் சிவசங்கரி, அபிநயா, ராஜேஷ் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழந்த சம்பவம், அரசூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.