தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் 3 பேருக்கு அதிநவீன இதய ஆப்பரேஷன்
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் 3 பேருக்கு அதிநவீன இதய ஆப்பரேஷன்
ADDED : செப் 02, 2025 05:07 AM

சென்னை:பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில், ஒரே வாரத்தில் மூன்று பேருக்கு, அதிநவீன முறையில், இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, ஹக்கீம், 52; தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உமர் அலி, 63; திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நசுருதீன் ஆகியோருக்கு, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில், வெற்றிகரமாக பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மார்பின் இடது பக்கத்தில், சிறிய வெட்டின் வழியாக, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில், மார்பு வெட்டப்படாது என்பதால், நோயாளிக்கு உடல் பாதிப்பு குறைவதோடு, மிக விரைவில் குணமடைவர்.
இந்த மூன்று நோயாளிகளும் விரைவில் எழுந்து நடமாட துவங்கியதாக, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையின், இதய நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஷிக் நிஹ்மத்துல்லா தெரிவித்தார்.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் நீவாணி, டாக்டர் நகுலன் ஆகியோர் கூறுகையில், 'தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லுாரியின், இதய அறுவை சிகிச்சை பிரிவு, நவீன சிகிச்சை மருத்துவ முறைகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி, தரமான சேவை வழங்கி வருகிறது.
'இந்த அறுவை சிகிச்சைகள், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன' என்றனர்.