மலேஷியாவில் கொட்டிய கனமழை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி
மலேஷியாவில் கொட்டிய கனமழை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி
ADDED : நவ 29, 2024 11:16 PM

கோலாலம்பூர், : மலேஷியாவில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த கன மழையால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சிக்கி மூன்று பேர் பலியாகினர்; 80,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுஉள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பகுதியில் உள்ள கெலன்டானில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு வசித்த 56,000க்கும் மேற்பட்டோரை, மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
இதேபோல் அருகே உள்ள தெரேன்கானு மாகாணத்தில் 24,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கன மழையால் மலேஷியாவின் ஏழு மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து துணை பிரதமர் அகமது ஜாஹித் ஹமிதி கூறியதாவது:
நடப்பாண்டில் பெய்து வரும் பருவமழையால் ஏழு மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, 31 ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்த மக்களுக்காக, 488 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தி உள்ளோம். இதுவரை, மூன்று பேர் பலியாகி உள்ளனர்.
இது, கடந்த 2014ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை காட்டிலும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கருதுகிறோம். எனினும், பாதிப்புகளை தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, வரும் மாதங்களில் மழையின் தீவிரம் இன்னும் அதிகரிக்கும் என, மலேஷிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.