ADDED : மே 12, 2025 11:54 PM

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கழணிப்பாக்கம் கிராமத்தில் நுாறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், 8 ஆண்கள், 41 பெண்கள் என, 49 பேர், அக்கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் நேற்று கால்வாய் துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பணி செய்யும் இடத்தின் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் ஆலமரத்தின் அடியில், நேற்று மதியம், 12:00 மணி அளவில், 10 பேர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில், அன்னபூரணி, 70, வேண்டா, 65, ஆகிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பச்சையம்மாள், 60, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பலியானார்.
முத்தம்மாள், 48, பாஞ்சாலை, 50, தேவி, 54, கனகா, 58, சம்பூர்ணம், 61, ஆகிய ஐந்து பெண்கள் படுகாயமடைந்து, வேலுார் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செய்யாறு போலீசார் விசாரிக்கின்றனர்.