இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் மாமூல் பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் குற்றச்சாட்டு
இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் மாமூல் பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் குற்றச்சாட்டு
ADDED : மார் 12, 2024 02:19 AM

ஓமலுார்: சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட, ஓமலுார் ஒன்றியம், பாகல்பட்டி அருகே அரசமரத்துக்காடு என்ற பகுதியில், தனியார் பட்டா நிலத்தில் ஊராட்சி ஒன்றியம் சார்பில், சில ஆண்டுகளுக்கு முன் நிழற்கூடம் கட்டப்பட்டிருந்தது.
கடந்த பிப்., 13ல் மர்ம நபர்களால் நிழற்கூடம் இடிக்கப்பட்டது. இதுகுறித்து பஞ்., தலைவி பழனியம்மாள், ஓமலுார் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சேலம் மேற்கு பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் போனில் புகார் கூறியும், வழக்கு பதியவில்லை என கூறப்படுகிறது. எம்.எல்.ஏ., அருள், தன் ஆதரவாளர்களுடன் ஓமலுார் போலீஸ் ஸ்டேஷன் முன் நடுரோட்டில் அமர்ந்து, நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கலைந்தனர்
ஏ.டி.எஸ்.பி., கண்ணன், பேச்சு நடத்தி, ''ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். அதன் பின் அவர்கள் கலைந்து சென்றனர்.
எம்.எல்.ஏ., அருள் நிருபர்களிடம் கூறியதாவது:
நிழற்கூடத்தை இடித்தவர்களை கைது செய்ய வேண்டும்.
ஓமலுார் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மாதம், 30 லட்சம் ரூபாய் மாமூலாக வருகிறது. ஒரு சந்து கடைக்கு, 7,000 ரூபாய் வசூல் செய்கின்றனர். நான்கு இடங்களில் கிளப் நடத்துகின்றனர்.
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு, 30,000 ரூபாய் வசூல் பண்ணுகின்றனர். சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், 50 லட்சம் ரூபாய் வசூல் செய்கின்றனர்.
கண்ணியமிக்க காவல் துறையில் சில புல்லுருவிகள் பணம் வெறி பிடித்து அலைகின்றனர்.
இது போல, சேலம் மாநகர காவல்துறையிலும் பட்டியல் எடுத்து வைத்துள்ளேன். 24 மணி நேரமும் பணியாற்றும் காவல் துறைக்கு, மூன்று மடங்கு சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என, சட்டசபையில் குரல் எழுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருளிடம் கேட்ட போது, ''ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் புரோக்கர்கள் கூறியது போல, ஓமலுார் இன்ஸ்பெக்டருக்கு மாதம், 33 லட்சம் ரூபாய், சூரமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு, 52 லட்சம் ரூபாய் மாமுல் வருகிறது,'' என்றார்.
விசாரணை
ஓமலுார் இன்ஸ்பெக்டர் லோகநாதன் கூறுகையில்,''நிழற்கூடம் இடிப்பு குறித்த புகார் தொடர்பாக, உரிய விசாரணை நடந்து வருகிறது.
''எம்.எல்.ஏ., அருள் முகாந்திரம் இல்லாமல் பேசுகிறார். அவரது குற்றச்சாட்டில் உண்மை இல்லை,'' என்றார்.
இது குறித்து சேலம், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூறுகையில், ''எம்.எல்.ஏ., அருள் சொல்லும் வேலைகளை சட்டத்துக்கு உட்பட்டுதான் செய்ய முடியும். அவர் சொன்ன, 52 லட்சம் ரூபாய் பட்டியலை எனக்கு கொடுத்தால், அவர் மீது வழக்கு, மானநஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்ய வசதியாக இருக்கும்,'' என்றார்.

