ADDED : ஜூன் 10, 2025 03:54 AM
சென்னை: 'கோ - ஆப்டெக்ஸ்' இணையதளம் வாயிலாக, பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 30 சதவீத சிறப்பு தள்ளுபடியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில், கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பருத்தி, பட்டு, மென்பட்டு உள்ளிட்ட அனைத்து ரக ஆடைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தமுள்ள, 150 விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமின்றி, இணைய வழியிலும், கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க, அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், இணையவழியில் கைத்தறி ரகங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 30 சதவீத சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கோ - ஆப்டெக்ஸ் பிரத்யேக செயலி அல்லது இணையதளம் வாயிலாக, நெகமம், மடிப்பு சேலை, வாழை நார் புடவை, பட்டு, பருத்தி என, வாடிக்கையாளர் வாங்கும் ஒவ்வொரு ஆடைக்கும், அதன் தொகையில் 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.