ADDED : செப் 29, 2011 09:50 PM
தாண்டிக்குடி : பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளுக்கு 'தினமலர்' செய்தியால், மறுவாழ்வு மலர்ந்துள்ளது.
அருப்புக்கோட்டை திருமேனி மடத்து தெருவை சேர்ந்தவர் வடிவேலு, மனைவி சாந்தி. இருவரும் கூலித்தொழிலாளிகள். இரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த மாதம், உடல் நலமின்றி வடிவேலு இறந்தார். துக்கம் தாளாமல், சாந்தியும் சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தைகள் ஆதரவற்று தவிக்கும் நிலை குறித்து, 'தினமலர்' இதழில் (ஆக., 20) செய்தி வெளியானது. தாண்டிக்குடி குட்வில் சாரிடபிள் சொசைட்டி என்ற தன்னார்வ நிறுவனம், ஆதரவற்று தவித்த ராஜலட்சுமி, 14, ஸ்ரீமலர், 12 , கார்த்திகேயன், 10, ஆகியோருக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. மூவரையும் தத்து எடுத்து சிறுமிகளை பட்டிவீரன்பட்டி தனியார் பள்ளியிலும், சிறுவனை தாண்டிக்குடி குட்வில் பள்ளியிலும் சேர்த்துள்ளனர். உயர்கல்வி வரை படிப்பு செலவை, இந்நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ராஜலட்சுமி கூறுகையில், ''பெற்றோரை இழந்து தவித்த எங்களுக்கு மறுவாழ்வு பெற உதவிய, 'தினமலர்' இதழுக்கு நன்றி. குட்வில் நிறுவனம் மூலம் அரவணைப்பு கிடைத்துள்ளது. நன்கு படித்து, ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்கு உழைப்பேன்,'' என்றார்.