நீர்வழித்தடங்களை துார்வார 5 மாவட்டங்களுக்கு ரூ.35 கோடி
நீர்வழித்தடங்களை துார்வார 5 மாவட்டங்களுக்கு ரூ.35 கோடி
ADDED : பிப் 12, 2024 02:10 AM

சென்னை : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், நீர்வழித்தடங்களை துார் வாரும் பணிக்கு, 35 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை யால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே, பருவ மழைக்கு முன்னதாக, இந்த மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களை துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு அதிகபட்சமாக, 20 கோடி ரூபாய் வரை ஒதுக் கீடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிதியில், போதிய அளவில் துார்வாரும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதனால், குடியி ருப்புகள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கும் வெள்ளம் வடிவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என, நீர்வளத்துறை வாயிலாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அதை ஏற்று, நடப்பாண்டு அக்டோபரில் வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு, 35 கோடி ரூபாயை நீர்வளத்துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியில் பாலாறு, கிருஷ்ணா குடிநீர் திட்டம், ஆரணியாறு, கொள்ளிடம், வெள்ளாறு வடிநிலங்களில், 167 இடங்களில் துார் வாருதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட வெள்ள தடுப்பு பணிகள் நடக்கவுள்ளன.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதால், அதற்குள் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதற்கான பணிகளை முடிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
பருவ மழைக்கு முன், மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்து, விடுபட்ட நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.

