ADDED : டிச 06, 2025 02:00 AM
சென்னை: டில்லி, மும்பை உட்பட பல்வேறு வழித்தடங்களில் செல்லும் 37 விரைவு ரயில்களில், கூடுதலாக 'ஏசி, ஸ்லீப்பர்' பெட்டிகள், இன்று முதல் இணைத்து இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டின் முன்னணி தனியார் விமான நிறுவனமான, 'இண்டிகோ' நிறுவனத்தின் விமான சேவைகள் கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, நாடு முழுதும் முக்கிய வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்களில், ஏசி மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகள் இணைத்து இயக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை - மும்பை, டில்லி - சென்னை, சண்டிகர் - புவனேஸ்வர், ஹவுரா, சென்னை - கோவை, திருச்சி, கொல்லம், சேலம், ஆலப்புழா உட்பட பல்வேறு வழித்தடங்களில் செல்லும் 37 விரைவு ரயில்களில், ஏசி, ஸ்லீப்பர் என, மொத்தம் 116 பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன.
இன்று முதல் வரும் 12ம் தேதி வரை, இந்த கூடுதல் பெட்டிகள் இயக்கப்படும். பயணியர் தேவை ஏற்படும் போது, கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

