தமிழக சட்டசபை தேர்தலில் 4 கூட்டணிகள் தினகரன் ஆருடம்
தமிழக சட்டசபை தேர்தலில் 4 கூட்டணிகள் தினகரன் ஆருடம்
ADDED : ஆக 31, 2025 07:04 AM
பரமக்குடி: ''தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் நான்கு கூட்டணிகள் அமையும்,'' என, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் 200 தொகுதிகளில் கட்சிக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். தொடர்ந்து தேர்தல் பணிகளை துவக்குவோம். என்.டி.ஏ., கூட்டணியில் நாங்கள் உள்ளோமா என தமிழக பா.ஜ., தலைவர் நயினார்நாகேந்திரனிடம் கேட்க வேண்டும்.
2024ல் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வந்தால் நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, இந்தியா சிறந்த வல்லரசு நாடாக மாறும் என்ற நோக்கத்தோடு நிபந்தனையற்ற ஆதரவளித்தோம். ஆகவே நயினார் நாகேந்திரன் இந்த கேள்விக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.
பிரதமரை சந்திப்பதாக இருந்தால் டில்லியிலேயே சந்தித்துக் கொள்வேன். வந்த இடத்தில் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. முதல்வரின் வெளிநாடு சுற்றுப்பயணத்தை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துவிடும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அண்ணாமலை பா.ஜ., வின் சிறந்த மாநிலத் தலைவராக பணியாற்றினார்.
தற்போது அவர் பழனிசாமியை ஆதரித்து பேசுவது என்பது, தேசிய தலைமையின் கட்டுப்பாடாக இருக்கலாம். மின்னணு ஓட்டுப்பதிவு மிஷினில் தவறு நடக்க வாய்ப்பில்லை என காங்., கட்சியை சேர்ந்த எம்.பி., கார்த்திக் சிதம்பரமே கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் நான்கு அணிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் மற்றும் விஜய் தலைமையில் அணிகள் அமையலாம்.
அரசு ஊழியர்கள் நாளை ஓய்வு பெறுவதாக இருக்கும் போது, முந்தைய நாள் சஸ்பெண்ட் செய்வது தவறு. அப்படி இருந்தால் மூன்று மாதத்திற்கு முன்பே செய்யலாம் என்பது நல்ல கோரிக்கை தான். வரவேற்கிறேன். டிசம்பருக்குள் அனைத்து கூட்டணி யூகங்களுக்கும் முடிவு கிடைத்துவிடும். வரும் தேர்தலில் அ.ம.மு.க., உறுதியாக வெற்றியை பெறும் என்றார்.

