கோவில்களில் சிலை திருட்டு 4 பேர் கும்பல் சிக்கியது
கோவில்களில் சிலை திருட்டு 4 பேர் கும்பல் சிக்கியது
UPDATED : நவ 08, 2026 06:03 PM
ADDED : நவ 08, 2026 05:58 PM

திருப்பூர்: ஊதியூர் அருகே இரு கோவில்களில் சிலை, குத்துவிளக்கு, பணம் திருடிய வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்து, ஐம்பொன் சிலை உள்ளிட்ட பொருட்களை மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பங்கம்பாளையத்தில் உள்ள பழமையான மாகாளியம்மன் கோவிலில், அக்., 30-ம் தேதி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ஒன்றரை அடி உயர ஐம்பொன் சிலை, இரண்டு அடி உயர பித்தளை குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
அதே நாளில், எல்லப்பாளையம் என்.காஞ்சிபுரத்தில் உள்ள புது நாட்ராய சுவாமி கோவிலின் கதவையும் உடைத்து, 30 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து, ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
எஸ்.பி., உத்தரவில் தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையில், இதில், தொடர்புடைய தேனியை சேர்ந்த முத்துச்செல்வன், 33, ஈரோட்டை சேர்ந்த சஞ்சய், 21, மதுரையை சேர்ந்த தங்கபாண்டி, 40, திருப்பூரை சேர்ந்த கார்த்திக், 35, ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஐம்பொன் சிலை, குத்துவிளக்கு மற்றும் 5,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
