கம்போடியாவுக்கு ஆட்கள் கடத்தல் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது
கம்போடியாவுக்கு ஆட்கள் கடத்தல் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது
ADDED : நவ 14, 2025 01:17 AM

சென்னை: நம் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து, சைபர் குற்றங்களில் ஈடுபட, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, மியான்மர் நாடுகளுக்கு, சுற்றுலா விசாவில், ஆட்கள் கடத்தப்படுகின்றனர்.
அவ்வாறு கடத்தப்படும் நபர்களை வைத்து, அந்நாடுகளில் சீனாவை சேர்ந்த மாபியா கும்பல், மோசடி முகாம்களை நடத்தி வருகின்றன.
சமீபத்தில், மியான்மர் ராணுவ ஆட்சிக்குழுவினர், மியாவாடி கே.கே., பார்க் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த, சைபர் மோசடி முகாம்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமானோர் தாய்லாந்திற்கு தப்பினர். இவர்களில், 465 பேர் இந்தியர்கள்.
அவர்கள், சில நாட்களுக்கு முன், இரண்டு கட்டமாக நம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில், தமிழகத்தை சேர்ந்த, 35 பேர் சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.
அவர்களிடம், மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக போலீசார் விசாரித்து, கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்திய நபர்கள் குறித்து விபரங்களை சேகரித்தனர்.
அவர்களை பிடிக்க, கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தலைமையில், 'புளூ டிரையாங்கிள் ஆப்பரேஷன்' என்ற பெயரில் மாநிலம் முழுதும் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலுார் மாவட்டங்களை சேர்ந்த, மணவாளன், 35; ராஜ்குமார், 36; தீபக், 27; ஜோவின் அபி ேஷக் ராஜன், 28 ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் தமிழகம் திரும்பிய 35 பேரில், 18 பேரை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது. மேலும், இதுபோன்ற நபர்களை தேடி வருகின்றனர்.

