கோவையில் சோகம்; மரத்தில் கார் மோதி வாலிபர் 5 பேர் பலி
கோவையில் சோகம்; மரத்தில் கார் மோதி வாலிபர் 5 பேர் பலி
UPDATED : அக் 25, 2025 02:12 PM
ADDED : அக் 25, 2025 06:39 AM

பேரூர்: கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கோவை, சிறுவாணி செல்லும் சாலையில் தெலுங்குபாளையம் பிரிவு அருகே மருது என்பவரது வாட்டர் வாஷ் மற்றும் வாகன பார்க்கிங் கங்காஸ்ரீ எனும் பெயரில் செயல்படுகிறது. இங்கு தஞ்சாவூரை சேர்ந்த ஹரிஷ், 20, பிரகாஷ், 20 திருச்சியை சேர்ந்த சபா, 20 ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
வேளாண் பல்கலையில் மூன்றாமாண்டு தோட்டக்கலை துறையில் பயிலும் தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன், 23, அரியலுாரை சேர்ந்த அகத்தியன், 20 ஆகியோருடன் ஹரிஷின் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தனர்.
நேற்று இரவு வாட்டர் வாஷிற்கு வந்த கார் ஒன்றை எடுத்துக்கொண்டு கேக் வெட்டுவதற்காக மாதம்பட்டி நோக்கி காரில் சென்றுள்ளனர். பேரூர், பச்சாபாளையம் அருகே மரத்தில் கார் மோதியது. இதில் ஹரிஷ், பிரகாஷ், சபா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிரபாகரன், அகத்தியன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிகிச்சை பலனின்றி அகத்தியன் உயிரிழந்தார். பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரபாகரன் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து பேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

