ADDED : நவ 17, 2025 01:27 AM
சென்னை: ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வான, 'டெட்' இரண்டாம் தாள் தேர்வில், 41,515 பேர் பங்கேற்கவில்லை.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம், 'டெட்' தேர்வுகளை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான டெட் தகுதித் தேர்வு, நவ., 15, 16ம் தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, 4 லட்சத்து 80,808 பேர் விண்ணப்பித்தனர்.
இடைநிலை ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' முதல் தாள் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்வை எழுத, 1 லட்சத்து 7,370 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 92,412 பேர் மட்டுமே பங்கேற்றனர். 14,958 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' இரண்டாம் தாள் தேர்வு, 1,241 மையங்களில் நேற்று நடந்தது. 3 லட்சத்து 73,438 பேர் விண்ணப்பித்த நிலையில், 3 லட்சத்து 31, 923 பேர் மட்டுமே பங்கேற்றனர்; 41,515 பேர் பங்கேற்கவில்லை.
மொழிப்பாடம், ஆங்கிலம், குழந்தைகளுக்கான உளவியல் கல்வி போன்ற பாடங்களில் இருந்து தலா 30 வினாக்கள், முதன்மை பாடங்களில் 60 வினாக்கள் என, மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்பட்டன. 'டெட்' இரண்டாம் தாள் தேர்வு சற்று எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.
'டெட்' முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் எளிமையாக இருந்ததால், அதிகளவில் தேர்ச்சி பெற வாய்ப்பு உருவாகி உள்ளது. இதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள, பணிபுரியும் ஆசிரியர்களும் அதிகளவு தேர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

