ADDED : நவ 18, 2025 06:54 AM

சென்னை : இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, மூன்று சுற்று கலந்தாய்வு முடிந்தும், 418 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனரகத்தின் கீழ், ஐந்து அரசு கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான, மூன்று சுற்று கலந்தாய்வு முடிந்துள்ளன. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பிய நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டில், 418 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
அதன்படி, நிர்வாக இடங்களில், ஆயுர்வேதத்தில் 31, சித்தாவில் 90, ஓமியோபதியில் 97 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அதேபோல, யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளில், 200 இடங்கள் காலியாக உள்ளன.
அவற்றை சிறப்பு கலந்தாய்வு வாயிலாக நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

