விதவிதமான பட்டாசுகளால் 44 சிறார்கள் கண் பார்வை பாதிப்பு
விதவிதமான பட்டாசுகளால் 44 சிறார்கள் கண் பார்வை பாதிப்பு
ADDED : அக் 25, 2025 12:32 AM
சென்னை:தீபாவளி பண்டிகையின் போது, குழந்தைகளை கவரும் வகையில், புதிய வடிவங்களில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், 44 சிறார்களின் கண் பார்வையை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, குழந்தைகளை கவரும் வகையில், 'ஹெலிகாப்டர், கார், சிங்கம், வாத்து, கிதார், டால்பின், ட்ரோன்' என, பல விதமான பேன்ஸி மற்றும் சிறிய அளவிலான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன.
குழந்தைகள் மற்றும் சிறார்களை கவர்ந்த, இவ்வகை பட்டாசுகளில் சில, கைகளில் பிடித்து தீப்பொறியை மட்டும் கக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு இருந்தன.
இவற்றில் சில வகை பட்டாசுகள், கைகளில் பிடித்திருந்த போதே வெடித்தன. இதனால், கை விரல்கள் பிளவுபட்டு, 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஓட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு, கண்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. சில தனியார் கண் மருத்துவமனைகளில், தீபாவளி பட்டாசுகளால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி, 700க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில், 44 பேர் பார்வையை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
பட்டாசுகளால் கண்களில் ஏற்படும் காயங்கள், லேசான எரிச்சலில் இருந்து, விழித்திரையில் சிக்கல்களை விளைவிக்கிற கருவிழி சிராய்ப்புகள், பார்வை திறன் இழப்பிற்கும் வழிவகுக்கிறது.
சில வகை பட்டாசுகள், தங்கத்தை உருக்கும் உயர் வெப்ப நிலையில் எரிவதால், அந்த தீ கண்களில் படும்போது, பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது.
பட்டாசுகளால் ஏற்பட்ட கண் காயங்களில் பாதிக்கப்பட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 700க்கும் மேற்பட்ட சிறார்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர்.
அதில் பலருக்கு சிகிச்சை அளித்து, பார்வை இழப்பு தடுக்கப்பட்டது. ஆனாலும், 44 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கணக்கெடுத்தால் எண்ணிக்கை உயரக்கூடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

