ADDED : அக் 25, 2025 12:32 AM
சென்னை:நடப்பாண்டில், 10 கடலாமைகளுக்கு, 'டெலிமெட்ரி' கண்காணிப்பு கருவி பொருத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான கடலோர பகுதிகளில், கடலாமைகள் நடமாட்டம் அதிகம். ஆண்டுதோறும் அக்., நவ., முதல் மார்ச், ஏப்., மாதம் வரை, கடலாமைகள் முட்டையிட கடற்கரை பகுதிகளுக்கு வந்து செல்லும்.
கடந்த ஆண்டு, 3.19 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு, 2.29 லட்சம் கடலாமை குஞ்சுகள் கடலில் விடுவிக்கப்பட்டன. முட்டையிட கடற்கரைக்கு வந்த கடலாமைகளில், 1,000க்கும் மேற்பட்டவை இறந்தது சர்ச்சையானது. இதையடுத்து, கடலாமைகள் இறப்பை தடுக்க, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இந்நிலையில், நடப்பாண்டு கடலாமைகள் முட்டையிட வரும் சீசன் துவங்க உள்ளது. அதையொட்டி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, வனத்துறை உயரதிகாரிகள் கூட்டம் நடந்தது. கடலாமைகள் நடமாட்டம் உள்ள வழித்தடங்கள், எண்ணிக்கை குறித்த ஆய்வுக் காக, 'டெலிமெட்ரி' கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 10 கடலாமைகள் பிடிக்கப்பட்டு, அவற்றில் அக்கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
அந்த கடலாமைகளின் நடமாட்டம், செயற்கைக் கோள் வாயிலாக கண்காணிக்கப்படும். இதனால், கடலாமைகளின் வருகை, எண்ணிக்கை குறித்த விபரங்கள் கிடைக்கும். கடற்கரை பகுதிகளில் கடலாமைகள் முட்டையிட வரும் போது, எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க, தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

