ADDED : பிப் 08, 2025 09:36 PM
சென்னை:தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் குழுக்களை சேர்ந்த மகளிருக்கு, 'ட்ரோன்' இயக்க பயிற்சி அளிக்கப்படுவதுடன், அவர்களுக்கு, 'ட்ரோன்' கருவியும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
கிராமங்களில் விவசாய பணிகளில், பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய வேலையில், மகளிர் சுய உதவி குழுக்கள், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த வகையில், மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன், பயிர் பாதுகாப்பு பணிகளை, 'ட்ரோன்' கருவி உதவியுடன் மேற்கொள்ள, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதல்கட்டமாக, 28 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் குழுவில் உள்ள, 44 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, 'ட்ரோன்' இயக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, ட்ரோன் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி, விளை நிலங்களில் மருந்து தெளிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் குறித்த விபரம், உழவர் செயலியில், தனியார் இயந்திர உரிமையாளர்கள் எனும், பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள, மகளிர் சுய உதவிக் குழுவினரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.