ADDED : பிப் 01, 2025 10:12 PM
புதுடில்லி;டில்லி புறநகரில் போலீசார் ரோந்து சென்ற போது துப்பாக்கியால் சுட்டு 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
டில்லி சட்டசபைத் தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு, டில்லி மாநகர் மற்றும் புறநகரில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டில்லி புறநகர் கேரா குர்த் பகுதியில் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர்.
அங்குள்ள ஒரு கிடங்கில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு ரோந்து போலீசார் சென்றனர்.
அங்கு சிலர் ஒரு லாரியில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் அங்கு சென்ற போது தப்பி ஓடினர்.
அதில் சிலர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். அதில், 3 பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தனர். தப்பி ஓட முயன்ற இருவர் உட்பட 5 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர். காயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிடிபட்ட 5 பேர் மீதும் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.