ADDED : ஜன 20, 2025 04:24 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் சாலாமேடு அரசு ஊழியர் நகர், சஞ்சய் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்,59; அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். சொந்த ஊரான விழுப்புரம் அடுத்த அருளவாடி கிராமத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டின் தளம் ஒட்டும் பணிக்காக நேற்று முன்தினம் , ஜனார்த்தனன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிக் கொண்டு, அருளவாடி கிராமத்திற்கு சென்றனர். நேற்று மாலை விழுப்புரத்தில் உள்ள வீட்டிற்கு வந்தனர்.
அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 50 சவரன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது.
தகவலறிந்த விழுப்புரம் ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, தாலுகா சப் இன்ஸ்பெக்டர்கள் முரளி, குணசேகரன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.