ADDED : நவ 21, 2024 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நிலவேம்பு குடிநீர் தயாரிப்பதற்காக, 5,000 கிலோ சந்தன கட்டைகளை, தமிழக மூலிகை தாவர கழகமான, 'டாம்கால்' நிறுவனத்துக்கு வழங்க வனத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கும், அந்த காய்ச்சல் வராமல் தடுக்கவும், சித்த மருத்துவர்கள் பரிந்துரை அடிப்படையில், நிலவேம்பு குடிநீர் பரவலாக வழங்கப்படுகிறது.
நிலவேம்பு குடிநீர் பொடி தயாரிக்க, பல்வேறு வகையான மூலிகைகளுடன், சந்தனத்துாளும் சேர்க்கப்படுகிறது. இதற்காக, 'டாம்கால்' நிறுவனம், 5,000 கிலோ சந்தன கட்டைகள் கேட்டு வனத்துறையிடம் விண்ணப்பித்தது.
அதை பரிசீலனை செய்த வனத்துறை, கிலோ, 347 ரூபாய் என்ற விலையில், 5,000 கிலோ சந்தன கட்டைகள் வழங்க, ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, வனத்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.