பிரான்சுக்கு கல்வி சுற்றுலா செல்லும் 54 ஆசிரியர்கள்
பிரான்சுக்கு கல்வி சுற்றுலா செல்லும் 54 ஆசிரியர்கள்
ADDED : அக் 21, 2024 04:42 AM

திருச்சி: ''பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் உட்பட, 60 பேர், பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்,'' என, அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
தனித்திறனுடன் விளக்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டுக் கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு, 'கனவு ஆசிரியர்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து, 32 ஆசிரியர்கள்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, 22 ஆசிரியர்கள் என, 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவர்களை 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற வைத்து சிறப்பிடம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு வகையில் இவர்கள் தேர்வாகினர். இவர்கள் உட்பட, 60 பேர் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
வெளிநாடு கல்விச் சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை சந்தித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேற்று வாழ்த்து தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஆசிரியர் சார்ந்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அங்கீகரிக்கும் விதமாகவும், முதல் முறையாக ஆசிரியர்களை, வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம்.
பள்ளிக் குழந்தைகளின் பற்களை பாதுகாக்க 'புன்னகை' திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, இரும்பு சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாத்திரை வழங்குகிறோம்.
அதில், சோகமான நிகழ்வு நடந்து விடக் கூடாது என்பதற்காக, பயிற்சி பெற்றவர்கள் வாயிலாக மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மாற்றுத்திறனாளி, ஆட்டிசம், இயன்முறை குறைபாடு உள்ள குழந்தைகளை கண்காணித்து கல்வி வழங்கி வருகிறோம்.
இவ்வாறு மகேஷ் கூறினார்.