ஒரே நாளில் 6 வணிகர் சங்கங்கள் மாநாடு: தேர்தல் நெருங்குவதால் போட்டி போட்டு ஏற்பாடு
ஒரே நாளில் 6 வணிகர் சங்கங்கள் மாநாடு: தேர்தல் நெருங்குவதால் போட்டி போட்டு ஏற்பாடு
ADDED : மே 03, 2025 12:52 AM

சட்டசபை தேர்தல் நெருங்குவதால், வணிகர் சங்கங்கள் தங்கள் ஆதரவு அரசியல் தலைவர்களை அழைத்து, ஒரே நாளில் ஆறு இடங்களில் வணிகர் சங்க மாநாடுகளை நடத்துகின்றன.
'கார்ப்பரேட்' நிறுவனங்களின், 'ஆன்லைன்' வர்த்தகத்தில் இருந்து, வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்
தமிழக பள்ளிகளில் தமிழ் பாடம் இல்லை என்றால், அந்த பள்ளிக்கு அரசு அனுமதி கொடுக்கக்கூடாது
சட்டசபை தேர்தலில் போட்டியிட, வணிகர் அமைப்புகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து, நாளை மறுநாள் வணிகர் தின மாநாடுகளை நடத்த, வணிகர் சங்க அமைப்புகள் ஏற்பாடு செய்து வருகின்றன. தி.மு.க., கூட்டணியை ஆதரிக்கும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தலைமையில், வரும், 5ம் தேதி, மதுராந்தகத்தில் மாநாடு நடத்தப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழிசை
பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் தலைமையில் நடக்கும் மாநாட்டில், முன்னாள் கவர்னர் தமிழிசை, த.மா.கா., தலைவர் வாசன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், பா.ம.க., பொருளாளர் திலகபாமா பங்கேற்கின்றனர்.
அ.தி.மு.க.,வை ஆதரிக்கும், அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்துார் ரவி, தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் ஏற்பாட்டில், சிங்கபெருமாள் கோவிலில் நடக்கும் மாநாட்டில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்கிறார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வெள்ளையன் இறந்த பின், அச்சங்கத்தின் தலைவராக வெள்ளையன் மகன் டைமன் ராஜா பொறுப்பேற்றுள்ளார். அவர் நடத்தும் இளைய தலைமுறை எழுச்சி மாநாடு, சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடக்கிறது. முன்னாள் கவர்னர் தமிழிசை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, த.மா.கா., தலைவர் வாசன் பங்கேற்கின்றனர்.
அமைச்சர்கள்
வெள்ளையன் தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பில், பொதுச்செயலராக இருந்தவர் பெருங்குடி ராஜா. அவர் நடத்தும் பேரமைப்பு சார்பில், படப்பையில் மாநில மாநாடு நடக்கிறது. அதில், தி.மு.க., அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு விவசாய சங்கங்கள் பேரவை தலைவர் முத்துக்குமார் தலைமையில், திருவண்ணாமலையில் நடக்கும் வணிகர் மாநாட்டில், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
-நமது நிருபர்-