மனை வரன்முறை மனுக்களை ஆராய டி.டி.சி.பி.,யில் 6 குழுக்கள் அமைப்பு
மனை வரன்முறை மனுக்களை ஆராய டி.டி.சி.பி.,யில் 6 குழுக்கள் அமைப்பு
ADDED : ஜூன் 13, 2025 01:02 AM
சென்னை:அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக, நிலுவையில் உள்ள கோப்புகளை மாவட்ட வாரியாக ஆய்வு செய்ய, ஆறு குழுக்களை அமைத்து, நகர் மற்றும் ஊரமைப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது.
தொழில்நுட்பம்
இதில் விண்ணப்பிக்க, 2019 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பின், 2024 பிப்., 29 வரை கூடுதல் அவகாசம் தரப்பட்டது.
இதில் தாக்கலான விண்ணப்பங்கள் மீது, தொழில்நுட்ப அனுமதி உத்தரவுகள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதில், ஆன்லைன் முறையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், பல்வேறு காரணங்களால் நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளன. நிலுவைக்கான காரணங்கள், ஆன்லைன் திட்டத்தில் உடனுக்குடன் தெரிய வருவதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், காலக்கெடு இன்றி மனை வரன்முறை விண்ணப்பங்கள் பெற, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ள நிலையில், ஏற்கனவே நிலுவையில் உள்ள கோப்புகளை முடிக்க, டி.டி.சி.பி., கவனம் செலுத்தி உள்ளது.
இதற்காக, தலா இரண்டு அதிகாரிகள் அடங்கிய ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, நிலுவை கோப்புகளை ஆய்வு செய்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, நகர் மற்றும் ஊரமைப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
நிலுவை ஏன்?
இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு விண்ணப்பங்கள், ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட்டன. இதற்கான இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவான நிலையில், அதில் ஏதாவது விபரங்கள், ஆவணங்கள் விடுபட்டு இருந்தால் தெரிவிக்கும் வசதி இல்லை.
என்ன காரணத்துக்காக ஒரு விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டது என்பதை தெரிவித்தால், விண்ணப்பதாரர் அல்லது பரிசீலனை அலுவலர் சரி செய்து இருக்கலாம்.
பல இடங்களில், மிக சாதாரண காரணங்களால் தான் விண்ணப்பங்கள் நிலுவையாகி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே, நேரடி ஆய்வு வாயிலாக, இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.