ADDED : டிச 06, 2025 02:14 AM
திருநெல்வேலி: திருநெல்வேலிக்கு வரும் ஐயப்ப பக்தர்களை ஏமாற்றி போலியான ஒரே பெயரை பயன்படுத்தி அல்வா விற்பனை செய்த 6 கடைகளை மூடி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
திருநெல்வேலி டவுன், ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருநெல்வேலியில் பிரபலமாக உள்ள சில அல்வா கடைகளின் பெயரை பயன்படுத்தி மோசடியாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். எனவே 6 கடைகள் மூடப்பட்டன.ஒரே நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி வணிக லாபம் ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தம் 600 கிலோ போலியான பெயர் கொண்ட அல்வாவை பறிமுதல் செய்தனர். பதிவு செய்யப்பட்ட மற்றும் சட்டப்பூர்வமான பெயர்களை பயன்படுத்தி மட்டுமே அல்வா விற்பனை செய்ய வேண்டும் என்று கடைகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் கூறியதாவது: திருநெல்வேலியில் பிரபலமாக உள்ள சில முக்கிய அல்வா நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி, அதே போன்ற பெயர்களை சிறிய மாற்றங்களுடன் பயன்படுத்தி மோசடியாக அல்வா விற்பனை நடைபெற்று வந்தது.
அல்வா தயாரிப்பு நிறுவனம் எந்த பெயரில் பதிவு செய்யப்பட்டதோ, அந்த பெயரிலேயே தயாரிப்பு மற்றும் விற்பனை செய்ய வேண்டும். பிற நிறுவனங்களின் பெயர்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நடவடிக்கையால் திருநெல்வேலியில் நடைபெறும் மோசடி அல்வா விற்பனைக்கு முடிவு கட்டப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

