ஒரே டூவீலரில் 6 மாணவர்கள் பயணம் கார் மோதி ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்
ஒரே டூவீலரில் 6 மாணவர்கள் பயணம் கார் மோதி ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்
ADDED : பிப் 17, 2025 07:48 AM
பெரம்பலுார்,: ஒரே டூவீலரில் சென்ற ஆறு மாணவர்களில் ஒருவர் பலியான நிலையில், மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார். மேலும் நான்கு பேர், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம், எறையூர் நேரு அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், பெருமத்துார், மங்கலமேடு, எறையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆறு பேர், நேற்று முருக்கன்குடி பிரிவு ரோடு எதிரே உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., ஒரே டூ வீலரில் சென்றனர்.
குளித்த முடித்ததும் வீட்டுக்கு புறப்பட்ட அவர்கள், திருச்சி- - -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், முருக்கன்குடி பிரிவு பாதை என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது, டூ வீலர் மீது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்ற, கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், நண்பர்கள் ஆறு பேரும் துாக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர்.
பெருமத்துாரை சேர்ந்த முத்துக்குமார், 17, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மங்கலமேடு சிவராமன், 16, கவலைக்கிடமாக உள்ளார். இதே கிராமத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், படுகாயங்களுடன் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
மங்கலமேடு போலீசார் தப்பியோடிய டிரைவர் மற்றும் காரில் பயணித்த சென்னையைச் சேர்ந்த ஆறு பேரை தேடி வருகின்றனர்.

