ADDED : அக் 25, 2024 12:13 AM
சென்னை:தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுதும், 6,585 பட்டாசு கடைகள் வைக்க, தீயணைப்பு துறை அனுமதி அளித்துள்ளது.
தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனரும், டி.ஜி.பி.,யுமான ஆபாஷ்குமார், துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 'பட்டாசு கடைகள் வைப்பதற்கு, வெடிபொருள் சட்ட விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை நேரடியாக ஆய்வுசெய்த பின்னரே, தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, தீயணைப்பு துறையினர் கூறியதாவது:
தற்காலிக பட்டாசு கடை அமைக்க விற்பனை உரிமம் கோருவோர், தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம்.
இதில், தீயணைப்பு துறையின் சான்றிதழ் கிடைத்த பின்னரே, பிற துறைகளிடம் சான்றிதழ் பெற முடியும்.
நடப்பாண்டில் தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைக்க தடையில்லா சான்றிதழ் கோரி, 9,177 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறைக்கு வந்தன. இதில், 6,585 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது; 1,911 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
போதிய பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என, 681 விண்ணப்பங்களை தீயணைப்பு துறை நிராகரித்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு, அதிக அளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டில், 7,200 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில், பட்டாசு கடைகளின் எண்ணிக்கை, 8,400 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.