தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் 6,862 கொலைகள் குடும்ப சண்டையால் உருண்ட தலைகளே அதிகம்
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் 6,862 கொலைகள் குடும்ப சண்டையால் உருண்ட தலைகளே அதிகம்
ADDED : அக் 17, 2025 11:01 PM
: தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில், 6,862 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தகாத உறவு, காதல் விவகாரம், குடும்பத் தகராறு காரணமாகவே அதிக கொலைகள் நடந்துள்ளன.
தொழில் போட்டியில், ரவுடிகள் பழிக்கு பழியாக கொலை செய்யப்படுவர். கிராமங்களில் சொத்து தொடர்பான கொலைகள் நடக்கும். ஆனால், தற்போது சாதாரணமாக பேசி தீர்க்க வேண்டிய பிரச்னைகளுக்கு எல்லாம் கொலைகள் நடக்கின்றன.
அந்த வகையில், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த கொலைகள் குறித்து, காவல்துறை அதிகாரிகள் தகவல்களை திரட்டி உள்ளனர். அவற்றை, மதம் மற்றும் ஜாதி ரீதியாக முன்விரோதம் ஏற்பட்டு நடந்த கொலைகள், ரவுடிகள், நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள் மற்றும் அரசியல் ரீதியாக நடந்த கொலைகளை வகைப்படுத்தி உள்ளனர் .
அதேபோல, மனநோயாளிகள் கொலை மற்றும் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்ட மன நோயாளிகள் எத்தனை பேர் என்ற விபரங்களையும் திரட்டி உள்ளனர். வரதட்சணை, காதல் விவகாரம், பாலியல் தொல்லை, தகாத உறவு, குடும்ப சண்டை, வாய்த் தகராறு, தொழில் போட்டி காரணமாக நடந்த கொலைகள் குறித்தும் காவல் துறை வழக்குகள் பதிவு செய்துள்ளது.
பணம் கொடுக்கல் வாங்கல், நில பிரச்னை, சொத்து அபகரிப்பு, முன்விரோதம், குடிபோதை மற்றும் காரணங்கள் கண்டுபிடிக்க முடியாத வகையில் நடந்த கொலைகள் பற்றிய விபரங்களையும் சேகரித்து உள்ளனர். அந்த வகையில், ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில்,6,862 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கொலைகளுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ததில், ஒவ்வொரு ஆண்டும் குடும்ப பிரச்னை காரணமாக, 400க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. அதேபோல, தகாத உறவு காரணமாக, குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டிலும், 150 - 160 கொலைகள் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஆபாசமாக திட்டி, வாய்த் தகராறில் ஈடுபட்டதால் குறைந்தபட்சம், 340 கொலைகள் நடந்துள்ளன. குடும்ப சண்டையால் நடந்த கொலைகள் தான் முன்னணியில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -