பா.ம.க., மோதலில் 7 பேர் கைது; எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் மீது வழக்கு
பா.ம.க., மோதலில் 7 பேர் கைது; எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் மீது வழக்கு
ADDED : நவ 06, 2025 07:37 AM

ஆத்துார்: சேலம் மாவட்டத்தில் பா.ம.க.,வினர் மோதிய விவகாரத்தில், அன்புமணி ஆதரவாளர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்ட 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வடுகத்தம்பட்டியில் அன்புமணி ஆதரவு பா.ம.க.,வினரும், ராமதாஸ் ஆதரவு பா.ம.க.,வினரும் ஆயுதங்கள் கொண்டு மோதிக் கொண்டனர். எம்.எல்.ஏ., அருள் முன்பு இந்த தாக்குதல் நடந்தது.
ராமதாஸ் ஆதரவு சேலம் கிழக்கு மாவட்ட செயலர் நடராஜன் அளித்த புகாரில், அன்புமணி ஆதரவு பா.ம.க., மாவட்டச் செயலர் ஜெயபிரகாஷ் உட்பட 20 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களில், ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, எம்.எல்.ஏ., அருள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது, அன்புமணி ஆதரவாளர் ராஜேஷ், அவரது தாய் பத்மா அளித்த புகாரைத் தொடர்ந்து, அருள், நடராஜன் உட்பட 52 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுபோல, மோதலில் காயமடைந்த அன்புமணி ஆதரவாளர் செந்தில்குமார் அளித்த புகாரில், எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சதாசிவம், சிவகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., கணேஷ்குமார் ஆகியோர், சேலம் எஸ்.பி., அலுவலகம் முன் கூடி, 'எங்கள் தரப்பில் ஏழு பேரை கைது செய்த போலீசார், எதிர்தரப்பில் ஒருவரை கூட கைது செய்யாமல் நடந்து கொள்வது ஏன்?' என கேட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

