ரூ.7,050 கோடி கடன் வாங்க மின் வாரியத்திற்கு அனுமதி
ரூ.7,050 கோடி கடன் வாங்க மின் வாரியத்திற்கு அனுமதி
ADDED : பிப் 21, 2025 12:49 AM
சென்னை:கடந்த 2023 - 24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, குறிப்பிட்ட அவகாசத்திற்குள் மின் வாரியம் சமர்ப்பித்துள்ளதால், தமிழக அரசு 7,050 கோடி ரூபாய் கடன் வாங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என்ற நிறுவனங்களாக செயல்படுகிறது.
ஒவ்வொரு நிறுவனமும், ஆண்டுதோறும் நிதியாண்டு முடிவடைந்ததும், வரவு -- செலவை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய மின் சட்டத்தை பின்பற்றி, மின் வாரியம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வந்தது. அதை குறித்த காலத்தில் வெளியிடாமல் தாமதம் செய்தது.
இந்நிலையில், மின் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், கூடுதல் கடன் பெற அனுமதி அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு 2021 - 22ல் அறிவித்தது. அதன் வாயிலாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 0.5 சதவீதம் மாநில அரசுகள் கடன் பெறலாம். இதனால், தமிழகம் 7,054 கோடி ரூபாய் கூடுதலாக கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டது.
சீர்திருத்த நடவடிக்கையாக மின் வாரியம், மத்திய மின் சட்டத்திற்கு பதில், நிறுவனங்கள் சட்டத்தை பின்பற்றி, இந்திய கணக்கு தரநிலை விதிப்படி, நிதிநிலை அறிக்கை தயாரிக்க முடிவு செய்தது.
இதில், வரவு - செலவு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் முழுவதுமாக இடம் பெற்றன.
மேலும், நிறுவன சட்டத்தின் கீழ் நிறுவனங்கள், ஒரு நிதியாண்டிற்கான நிநிநிலை அறிக்கையை, அந்தாண்டு முடிவடைந்த ஆறு மாதங்களுக்குள் தணிக்கை செய்து, மக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும். கூடுதலாக, மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்படும்.
அதன்படி, கடந்த டிசம்பருக்குள், 2023 - 24 நிதிநிலை அறிக்கையை மின் வாரியம் தயாரித்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால், தமிழக அரசு கூடுதலாக 7,054 கோடி ரூபாய் கடன் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

