ADDED : அக் 26, 2024 04:38 AM
சென்னை : மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில், தரமற்ற 71 மருந்துகள்; நான்கு போலி மருந்துகள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் சார்பில், ஆய்வு செய்யப்படுகின்றன. போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், அவற்றை சந்தையில் இருந்து நீக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த மாதத்தில் மட்டும், 1,000க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், ஆன்ட்டி பயாடிக், காய்ச்சல், ரத்த உறைவு, சளி தொற்று, சர்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, கால்சியம் குறைபாடு, கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும், 71 மருந்துகள் தரமற்றவையாக இருப்பதும், நான்கு மருந்துகள் போலியானவை என்பதும் கண்டறியப்பட்டது.
அதன் விபரங்கள், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின், cdsco.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.