வெட்டப்பட்ட மரங்களை வெளி மாநிலங்களுக்கு எடுத்து செல்ல அனுமதி கோரி 7,749 பேர் மனு
வெட்டப்பட்ட மரங்களை வெளி மாநிலங்களுக்கு எடுத்து செல்ல அனுமதி கோரி 7,749 பேர் மனு
ADDED : அக் 04, 2025 01:27 AM
சென்னை:தமிழகத்தில் இருந்து மரங்களை வெட்டி வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி கோரி, 7,749 பேர், 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்து காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்திற்குள் மரங்கள் வெட்டுவதற்கும், அவற்றை எடுத்துச் செல்வதற்கும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். தனியார் நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல, மாவட்ட வன அலுவலர்கள், 'ஆன்லைன்' முறையில் அனுமதி வழங்குகின்றனர்.
மரத்தடிகள் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதேபோன்று, வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மரத்தடிகள் கொண்டு வரப்படுகின்றன.
இவ்வாறு மாநிலங்களுக்கு இடையே மரங்களை எடுத்துச் செல்வோருக்கு, போக்குவரத்து உரிமம் வழங்க, மத்திய அரசு, https://ntps.nic.in/ என்ற இணையதளத்தை துவக்கி உள்ளது.
இதில், மரம் எடுத்துச் செல்வோர், ஆன்லைன் முறையில் உரிமம் பெறலாம். தமிழகம் உள்ளிட்ட, 19 மாநிலங்கள், இந்த இணையதளத்தில் வழங்கப்படும் உரிமத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை ஏற்கவில்லை. இதனால், மரங்களை வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு மரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுவது போன்று, பிற மாநிலங்களில் இருந்தும் மரங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதை சார்ந்த வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சிரமம் இருக்காது தற்போது, மையப்படுத்தப்பட்ட முறையில், ஆன்லைன் வாயிலாக இதற்கு உரிமம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து இந்த உரிமம் பெற, 7,749 பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
குறிப்பாக, இத்திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு செல்ல உரிமம் கோரிய விண்ணப்பங்கள் தான் அதிக அளவில் நிலுவையில் உள்ளன.
அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தை ஏற்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மாநிலங்களுக்கு இடையே மரங்கள் கொண்டு செல்வதில் சிரமம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.