கையிருப்பில் 78,000 டன் விவசாயிகளுக்கு தாராளமாக உரங்கள் வினியோகம்
கையிருப்பில் 78,000 டன் விவசாயிகளுக்கு தாராளமாக உரங்கள் வினியோகம்
ADDED : நவ 12, 2025 01:50 AM
சென்னை :கையிருப்பில், 77,957 டன் உரங்கள் இருப்பதுடன், இம்மாதத்திற்கு ஒதுக்கப்பட்ட, 1.50 லட்சம் டன் உரங்களும் வர துவங்கியுள்ளதால், விவசாயிகளுக்கு தாமதமின்றி வினியோகம் செய்யுமாறு, கூட்டுறவு சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களிடம், 22,450 டன் யூரியா, 15,731 டன் டி.ஏ.பி., உரம், 12,615 டன் எம்.ஓ.பி., உரம், 27,154 டன் காம்ப்ளக்ஸ் என, மொத்தம், 77,957 டன் உரங்கள் கையிருப்பில் உள்ளன.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதி காரி ஒருவர் கூறியதாவது:
மாநிலத்தின் ரசாயன உர வினியோகத்தில், 25 சதவீத அளவுக்கு பங்கை, கூட்டுறவு விற்பனை இணையம் வழங்குகிறது.
மத்திய அரசின் ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, தமிழக அரசு மாதந்தோறும் உரங்கள் ஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்கிறது. இந்த உரங்கள், ஆலைகளில் இருந்து பெறப்படுகின்றன.
அவை, சங்கங்கள் வாயிலாக விவசாயி களுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டில், 4.67 லட்சம் டன் உரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இதன் மதிப்பு, 868 கோடி ரூபாய்.
தற்போதைய நிலவரப்படி, கூட்டுறவு சங்கங்களில் நான்கு வகையிலும் சேர்த்து, 77,957 டன் உரங்கள் இருப்பு உள்ளன.
இம்மாதத்திற்கு, 65,020 டன் யூரியா, 15,000 டன் டி.ஏ.பி., 24,000 டன் எம்.ஓ.பி., 46,000 டன் காம்ப்ளக்ஸ் என, 1.50 லட்சம் டன் உரங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், பெறப்பட்டு வருகிறது.
எனவே, விவசாயிகளுக்கு உரங்களை தாமதமின்றி விரைவாக வழங்குமாறு, சங்கங்களின் அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

