ADDED : நவ 12, 2025 01:51 AM
சென்னை, :'இரிடியத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 1 கோடி ரூபாய் கிடைக்கும்' என, கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில், மேலும், எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இரிடியம் என்ற உலோகம் மிகவும் அரிதானது. அதில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 1 கோடி ரூபாய் தரப்படும் என, ரிசர்வ் வங்கி பெயரை தவறாக பயன்படுத்தி, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது.
இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்து, முதல் கட்டமாக, 30 பேரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து, தேனி மாவட்டம் கம்பம் சந்திரன், 50; வருசநாடு பழனியம்மாள், 55 உட்பட, 32 பேரை கைது செய்தனர்.
மொத்தம், 62 பேர் கைதான நிலையில், சென்னையைச் சேர்ந்த புஷ்பராஜ், 39; கோபிநாத், 38, உட்பட மேலும் எட்டு பேரை, நேற்று கைது செய்துள்ளனர்.
இவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, மோசடிக்கு பயன்படுத்திய லேப்டாப், மொபைல் போன்கள், செல்லாத ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கி பெயரில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

