UPDATED : செப் 18, 2024 12:08 AM
ADDED : செப் 18, 2024 12:00 AM

போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக உள்ள போலீஸ் பட்டியலை, தமிழக உளவுத்துறை தயாரித்துள்ளது. அதில் 850 அதிகாரிகளின் பெயர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்குள் வித விதமான போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன.
ஏராளமான இளைஞர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்களும் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. போதை பழக்கம் காரணமாக எல்லா வகையான குற்றங்களும் அதிகரித்தன.
மத்திய அரசும், நீதி மன்றங்களும் இந்த பிரச்னையை சீரியசாக அணுகுமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு போதுமான அக்கறை காட்டுவதாக தெரியவில்லை என, அதிருப்தி தெரிவித்த ஐகோர்ட் நீதிபதிகள், இது சம்பந்தமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
எதிர்க்கட்சிகளும் இதை கையில் எடுத்து அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. போதைப் பொருள் கடத்தல் தமிழகத்தில் மிகப்பெரிய தொழிலாக வளர்ந்துள்ளதற்கு, போலீஸ் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவு தான் காரணம் என மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.,வின் தமிழக தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
இவற்றின் விளைவாக, முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்னை பற்றி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 'போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கு நிர்ணயித்து, போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதை அடியோடு ஒழிக்க வேண்டும் என, காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
ஸ்டாலின் ஆலோசனையின்படி, போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை இணைத்து, புதிதாக அமலாக்கப் பணியம் - குற்றப் புலனாய்வு துறை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
இப்பிரிவு கடந்த ஆண்டு டிசம்பர் முடிய அதிரடியாக மாநிலம் முழுதும் வேட்டை நடத்தி, போதை பொருட்கள் விற்ற 22,447 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 42,337 கிலோ கஞ்சா, 1.234 கிலோ ெஹராயின், 74,412 போதை மாத்திரைகள், 223 கிலோ பிற போதை வஸ்துகளை பறிமுதல் செய்தனர்.
நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் வரை, 4,522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7,123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் 11,081 கிலோ கஞ்சா, 74,016 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
எனினும், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகரித்து வருவதாகவும், சிறு வியாபாரிகள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது. போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் பெரிய புள்ளிகள் பிடிபடவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து நடந்த வேட்டையில் சில போலீசார் சிக்கினர்.
* கோவையில் போதை பொருள் விற்பனை செய்த ஏழு பேர் பெங்களூருவில் பிடிபட்டனர். அவர்களை விசாரித்தபோது, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய கான்ஸ்டபிள் ஸ்ரீதர், 29, மொபைல்போன் வாயிலாக கடத்தல்காரர்களை வழிநடத்தியது தெரியவந்தது. அவரை கைது செய்து, கடத்தல் கும்பலிடம் அவர் பெற்ற கூலி 1.60 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.
* கோவை ரத்தினபுரி சங்கனுார் சாலை சிக்னல் அருகே, கஞ்சா விற்ற காரமடை சந்திரபாபு, 33, சிக்கிய போது, அவரை வழிநடத்தியதாக ஈரோடு சைபர் குற்ற தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், 35, கைது செய்யப்பட்டார்.
* நாகையில் இலங்கைக்கு கடத்த இருந்த, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள, 400 கிலோ கஞ்சா பிடிபட்டது. கடத்தல் கும்பல் தலைவன் சிலம்பரசன் வீட்டில், நாகை இன்ஸ்பெக்டர் பெரியசாமி ரெய்டு போனார். அதன் பின், அதே கும்பலுடன் அவர் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டு, 'லெக் பீஸ்' கடித்து கும்மாளம் போட்ட காட்சிகள் வெளியாகின.
இவ்வாறு போதை கடத்தல் கும்பல்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது மாநிலம் முழுவதும் உள்ள எதார்த்தம் என தெரிந்ததும், அரசின் உயர் மட்டத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு களையெடுக்க முதல்வர் உத்தரவிட்டார். உளவுத் துறை முடுக்கி விடப்பட்டது. பெரும்பாலும் உள்ளூர் போலீசுக்கு எல்லா விவரமும் தெரியும் என்பதால், உளவுப்பிரிவு அதிகமாக சிரமப்படவில்லை. சீக்கிரமே பட்டியல் தயாரானது.
பட்டியலில் 850 அதிகாரிகளின் பெயர்கள் இருப்பதை கண்டு மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஆடிப்போயிருக்கின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக, அந்த பட்டியல் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'போதை பிசினஸ் என்பது நாட்டையே சீர்குலைத்து, எதிர்கால சந்ததிகளின் வாழ்வை நாசமாக்கும் குற்றம் என்பதால், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் மற்றவர்களுக்கு பாடமாக அமையும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என்றனர். குற்றத்துக்கு பொருத்தமான தண்டனை வழங்கப்படுமா அல்லது வழக்கம்போல பணியிட மாற்றம் செய்வதுடன் முடிந்துவிடுமா என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.
போதை பொருள் தடுப்பு எனதொடரும் போலீஸ் சோதனை
சமீபத்தில், சென்னை அருகே காட்டாங்குளத்துாரில் உள்ள, பிரபல கல்லுாரியை சுற்றியுள்ள தனியார் விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ள மாணவர்களின் அறைகளில், 500க்கும் மேற்பட்ட போலீசார், கஞ்சா, குட்காவுக்கு எதிராக சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல, கோவை மாவட்டம், சூலுார் அடுத்த நீலாம்பூரில், தனியார் கல்லுாரி அருகே, மாணவர்கள் வசித்து வரும் வீடுகளில், 200க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு, கஞ்சா, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை பெரும்பாக்கம் எழில் நகரில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு, 12 பிளாக்குளில் உள்ள, 1,400க்கும் மேற்பட்ட வீடுகளில், 300க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று கஞ்சா, குட்கா விற்பனை நடக்கிறதா என, சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்றுமுன்தினம், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து, சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனைகள் கண்துடைப்பு நாடகம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- நமது நிருபர் -