UPDATED : அக் 25, 2026 08:54 PM
ADDED : அக் 25, 2026 08:08 PM
சென்னை: மற்றொரு சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், 'கிரானைட்' வீரமணி மீது, எட்டாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை போலீசார், இன்று (அக்.,25) வெளியிட்ட அறிக்கை:
கிரானைட் வீரமணி மீது, ஏற்கனவே ஏழு வழக்குகள் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறுமியின் புகார் மற்றும் வாக்குமூலம் அடிப்படையில், அவர் மீது எட்டாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வீரமணி, சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் கூட்டாளி கணேசன் ஆகியோரை காவலில் எடுத்து, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வைத்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், வீரமணி மீதான வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் என, சந்தேகிக்கப்படும், ஐந்து நபர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளால் பாதிக்கப்பட்டதாக இதுவரை, 12 சிறுமியர் புகார் அளித்துள்ளனர்.
மகள் ஆஜராகவில்லை
இதற்கிடையில், விசாரணைக்கு நேற்று ஆஜராக வேண்டும் என, வீரமணியின் மக்கள் அர்ச்சனாவுக்கு சிறப்பு புலனாய்வு குழு போலீசார், சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அவர் நேற்று ஆஜராகவில்லை. அவரின் வழக்கறிஞர் விக்னேஷ் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரிடம் கடிதம் ஒன்றை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:
நரம்பு தொடர்பான பிரச்னை காரணமாக, 20 ஆண்டுகளாக அர்ச்சனா மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வருகிறார். சிங்கப்பூரில் உள்ள மகனை பார்க்க செல்ல முயன்ற போது, சிறப்பு புலனாய்வு குழு போலீசார், விமானத்தில் இருந்து அவரை இறக்கி அழைத்து சென்று பல மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
கடந்த, 23ம் தேதி போலீசாரின் விசாரணைக்கு பின், அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால், விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை. இதுதொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசாரிடம் முறைப்படி கடிதம் வழங்கி உள்ளோம். சட்ட ரீதியான விசாரணைக்கு, அவர் முழு ஒத்தழைப்பு அளிப்பார்.
